Saturday, 18 May 2013

தஞ்சை பிரகதீஸ்வரர் - அறிந்து இராத சில அதிசய தகவல்கள்


தஞ்சை பிரகதீஸ்வரர் - அறிந்து இராத சில அதிசய தகவல்கள்

சின்ன வயதில் ராஜ ராஜ சோழன் படம் பார்த்தபோது , ஏற்கனவே சரித்திர நாவல்கள் படித்து அறிமுகம் இருந்ததால் ,கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.( சிவாஜியின் பிரமாதமான நடிப்பைத் தவிர்த்து). பொன்னியின் செல்வன் அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு பாலாவின் உடையார் படித்தபோது , பெருவுடையார் ஆலயம் எழுப்பப் பட்டதை அவரின் பார்வையில் இருந்து , நம் மனத்துக்குள் செலுத்தும் வித்தையை உணர முடிந்தது. நாமும், ஆலயம் கட்டும்போது கூட இருந்து இருப்போமோ என்கிற கேள்வியை மனம் எழுப்புவதை தாண்டி, நம் மனத்திலும் ஒரு கோவில் கட்டபப்ட்டு இருந்ததை , வாசகர்கள் உணர்ந்து இருப்பீர்கள். . இது ஒரு எழுத்தாளனின் ஆளுமை. படிக்கும்போது உள்ள சுகம், பார்க்கும்போது கொஞ்சம் கம்மிதான்.


பிரபல நாவல்களை படமாக எடுக்கும்போது , நம் மனத்துக்கு அவ்வளவு திருப்தி ஏற்படுவது இல்லை. தி. ஜா.வின் மோகமுள் அதற்க்கு சரியான உதாரணம். கும்பகோணத்தின் புழுதியும், காப்பி மணமும் , குளக்கரையும் , பாபுவையும், யமுனாவையும், ரங்கண்ணாவையும் - நம் மனம் எடுக்கும் படத்தை உலகத்தின் எந்த பிரமாதமான டைக்டரும் , நம் கண் முன்னே காட்டுவது கஷ்டம் தான்.

இருக்கும் இடத்திலேயே ஓடும் அனுபவத்தைத் தரும் ஓர் அருவி இந்த மோகமுள் போன்ற நாவல்கள். கதையின் ஜீவனைத் திரைப்படம் சொல்ல முடியவில்லை. படிப்பவரின் எழுத்து வீச்சில் திளைத்தபடி, பாத்திரங்களை நம் முன் உயிரோடு நமக்கு மிகவும் நெருக்கமான நபர்களாகவே உலவ விட்ட விந்தையைப் படித்துத் தான் உணர முடியும்.

சரி, எதற்கு திடீர் என்று ராஜ ராஜன் ஞாபகம் என்கிறீர்களா?

படிக்கும்போது நாம் உணர்ந்து இருந்த பிரம்மாண்டத்தை விட - நேரில் பார்க்கும்போது , இன்னும் பிரமாதமாக இருக்கும் ஒரு அற்புதம் தான் , இந்த பிரகதி ஈஸ்வரர் . தமிழ் நாட்டின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படும் சோழர் காலத்து மாபெரும் சக்கரவர்த்தி.

டிஸ்கவரி சானலில் , கோவில் எப்படி அந்த காலத்தில் கட்டி இருந்து இருப்பார்கள் என்று டாக்குமெண்டரி அடிக்கடி காட்டுகின்றனர். அதைப் பார்த்த பிறகுதான், நமக்கும் பல கேள்விகள் எழுகின்றன <
எப்படிய்யா, அவ்வளவு பெரிய கல்லை , தூக்கி மேல வைச்சாங்க..? எங்கே கிடைச்சு இருக்கும், எப்படி அங்கே இருந்து தூக்கி வந்து இருப்பாங்க..? அதோட எடை இவ்வளவுன்னு எப்படி கண்டுபிடிக்கிறாங்க? அதுக்கு என்ன வழி ? >

எதற்கு வேலை மெனக்கெட்டு இப்படி செய்யனும்? இவ்ளோ பெரிய விஷயம் பண்ணனும்னா, அப்போ உள்ள இருக்கிற கர்ப்பகிரகம் எவ்வளவு சக்தி வாய்ந்த கதிர்களையும் ஈர்க்க கூடியதா இருக்கணுமே! முகத்தில் அறையும் பிரமாண்டத்தையும் தாண்டி, காலம் காலமாக அருள் பாலித்து வரும் அந்த இறைவனின் மகத்துவம் எப்பேர்ப்பட்டது என்பதையும் மனப்பூர்வமாக உணர முடிகிறது.

எண்பது ஆயிரம் கிலோ எடையுள்ள கல்லை, தற்போது உள்ள எந்த தொழில் நுட்பமும் இருந்து இருக்க வாய்ப்பில்லாத அந்த காலத்தில் , எப்படி கோபுரத்தின் உச்சியில் வைத்து இருக்க கூடும்? அதை தாங்கும் அளவுக்கு கோபுரம் வடிவமைக்கப்பட்டது? இவையெல்லாம், தற்போது இருக்கும் பொறியியல் வல்லுனர்களையே வியப்பில் ஆழ்த்தும் அதிசயங்கள்...

கிட்டத்தட்ட தென் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், ஒன்றுகூடி - உடல் உழைப்பு , பொருள் உதவி எல்லாம் செய்து எழுப்பிய மகத்தான ஆலயம் இது. ராஜ ராஜ சோழன் என்னும் அரசன், ஒரு தனிமனிதன் தன் பெருமையை காலம் காலமாக நிலைக்க செய்த ஒரு செயல் , என்று நினைத்து , இங்கு நிலவும் தெய்வ சாந்நித்தியத்தை மறந்துவிட போகிறீர்கள்...

இங்கு உள்ள வராஹி - ஒரு மாபெரும் வரப்பிரசாதி. சோழர்களின் குல தெய்வமாக இருந்த துர்க்கை அம்மனுக்கு போர்படைத் தளபதி. கணபதிக்கு இணையாக முதல் வழிபாடு இங்கு இவளுக்கே என்னும்போது - நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிகிறது. அடுத்து நந்தி எம்பெருமான். பிரதோஷ நேரத்தில் , ஒருமுறை சென்று பாருங்கள்...

பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் - ராஜ ராஜ சோழனின் காலத்தில் , அரசருக்கு பலவிதங்களில் இந்த ஆலயம் அமைக்கும்போது வழி காட்டி இருந்து இருக்கிறார். சிவலிங்கம் மட்டும் 25 ,000 கிலோ எடையுள்ளது என்கிறார்கள்..... இப்போது புரிகிறதா? இது மனிதமுயற்சியையும் தாண்டி, தன் செல்லப் பிள்ளைகளான சித்தர்களையும் உடன் வைத்துக்கொண்டு - அருண்மொழி என்னும் கருவியின் மூலம் , சிவம் தன் சித்து விளையாட்டை நிகழ்த்தி இருப்பதை!

அருண்மொழித் தேவருக்கு, சிவம் எப்பேர்பட்ட பேறை அளித்து இருக்கிறது தெரியுமா? அவர் மூலமாக , சிவம் தான் உறைய , தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட மாபெரும் அதிசயம் தான் , இந்த ஆலயம்.

மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பாருங்கள்...

புராதனக் கல்வெட்டு சாசனங்களையும் ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தையும் பற்பல தெய்வீக ரகசியங்களையும் உள்ளடக்கியது, தஞ்சை பெருவுடையார் கோயில். சுந்தர சோழர் வம்சத்தில் வந்த சக்ரவர்த்தி ராஜராஜ சோழனால் கோயில் எழுப்பப்பட்ட வரலாறு, நாடிச் சுவடியில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் காவிரியின் கரையில் கம்பீரமான 216 அடி விமான உயரமும், அதன் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட 80 டன் எடையுள்ள கலசத்தையும் பொருத்தி 9 அடி உயரமும், 23.5 அடி சுற்றளவும், 25 டன் எடையும் கொண்ட ஒரே கல்லால் ஆன பெருவுடையார் லிங்கத்தையும் தனது குருவான ‘ஹ
தத்தர்’ ஆலோசனை பேரில் உருவாக்கினார் ராஜராஜ சோழன். நந்தி தேவனார் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உயிர் ஊட்ட பெற்றவர். கோயிலுக்கு வாஸ்து சாந்தி செய்த பின்னரே நந்தி தேவரை நிறுவினார், சோமன் வர்மா என்ற தலைமை சிற்பி. 12 அடி உயரமும் 19.5 அடி நீளமும் கொண்டவர் நந்தி. ஆதலால், வாஸ்து புருஷன் தன் அருளாசியை பக்தர்களுக்கு எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment