Saturday, 18 May 2013

அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில்


                                              
சந்திரமவுலீஸ்வரர் பூஜை : துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்சங்கரர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவருக்கு பின் 13 நூற்றாண்டு காலத்தில் சுரேசுவரர் முதல் 36 பேர் பீடாதிபதிகளாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதிசங்கரர் கூறியபடி அத்வைத வேதத்தை பரப்பி வருகின்றனர்.
தற்போது சிருங்கேரி மடத்தின் 36வது பீடாதிபதியாக "ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள்' உள்ளார். இவருக்கென கோயில் அருகேயே துங்கபத்திரை ஆற்றைக்கடந்து தனி மடம் உள்ளது. தர்பார் தரிசனம் ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் சிருங்கேரியில் தர்பார் தரிசனம் காண்பது சிறப்பு. இந்த தரிசனத்தின் போது பஞ்சாங்கம் வாசித்து, நான்கு வேதங்கள் ஓதி, மேளதாளங்கள் ஒலிக்க தேவிக்கு தீபாராதனை நடக்கும். சாரதாதேவியின் இடதுபக்கம் தங்கத்தால் ஆன சிம்மாசனத்தில் தரிசனத்தின் போது பொன்னாடை போர்த்தி, தலையில் கிரீடம் வைத்து, கழுத்தில் விலை உயர்ந்த நகைகள், கையில் ருத்ராட்ச மாலை, விரல்களில் பெரிய மோதிரங்களுடன் அம்மனின் பிரதிநிதியாக பீடாதிபதி அமர்ந்து தரிசனம் தருவார். இதுவே தர்பார் தரிசனம் ஆகும். மடத்தின் காவல் தெய்வங்கள் கிழக்கே - காலபைரவர் மேற்கே - அனுமன் வடக்கே - காளி தெற்கே - துர்க்கை கோயில் அமைப்பு சாரதாதேவி பெரிய ராஜகோபுரத்துடன் தனி கோயிலில் அருளுகிறாள். அருகே வித்யாசங்கரர் பிரமாண்டமான கருங்கல் கோயிலில் இருக்கிறார். ஆதிசங்கரர், ஜனார்த்தனர், அனுமன், கருடன், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர், ஹரிஹரன், மலையாள பிரம்மா, சுப்ரமணியர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. 1907ல் இக்கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1916ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 12 முதல் 3 மணிவரையிலும், இரவு 7 முதல் 9 மணிவரை அன்னதானம் நடக்கிறது.
 சிருங்கேரி என்றால்...
சிர்ங்க கிரி என்பதே சிர்ங்கேரி என வழங்கப்படுகிறது. தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் "ரிஷ்யசிருங்கர்' என்ற முனிவர். இவர் விபாந்த முனிவரின் புதல்வர். ரிஷ்யசிருங்கர் என்றால் "மான் கொம்பு உடையவர்' என்று பொருள். அவர் வாழ்ந்த இப்பகுதி "சிருங்கேரி' ஆனது.
துங்கபத்ரா நதி:

சிருங்கேரியில் ஓடும் புண்ணிய நதி துங்கபத்ரா. துங்கை, பத்ரா ஆகிய இரண்டு நதிகள் இணைந்து ஓடுவதால் இப்பெயர் பெற்றது. இவை இரண்டும் சகோதரி நதிகள். துங்கை கர்நாடகாவின் வடக்கே உள்ள வராஹ மலையில் உற்பத்தியாகி, 16 கி.மீ. தூரம் ஓடி, பத்ரா என்ற நதியுடன் இணைகிறது.
பீடத்தின் அமைப்பு:

ஆதிசங்கரர் அமைத்த நான்கு பீடங்களும் தனி சிறப்பு பெற்றவை. இந்தியாவின் பரப்பளவு 1960 சதுர மைல். இதை நான்கு சம வட்டங்களாக்கினால் ஒவ்வொன்றும் 490 சதுர மைல் அளவானது. இந்த முறையில் தான் நான்கு பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, வடக்கே பத்ரி, தெற்கே சிருங்கேரி ஆகிய இடங்களில் ஆதிசங்கரர் மடங்களை ஸ்தாபித்தார். சிருங்கேரியில் ஆச்சாரியார் சுரேசுவரா தலைமையில் யஜுர்வேத முறையில் சாரதா பீடம் அமைக்கப்பட்டது.
மழைக்கடவுள்:

சிருங்கேரியிலிருந்து 10கி.மீ. தூரத்தில் மலஹானிகரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள தூணில் பிரசித்தி பெற்ற விநாயகர் உள்ளார். இவரது உருவம் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மழை வருவதற்காகவும், இயற்கையின் சீற்றத்தை தடுக்கவும் இவருக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இங்கு சிர்ங்க முனிவர் வழிபட்ட மலஹானிகரேசுவரரும், அம்மன் பவானியும் அருளுகின்றனர்.மாகிஷ்மதி நகரில் மண்டனமிசிரர் என்ற விசுவரூபரிடம் ஆதிசங்கரர் வேதம் குறித்து வாதம் செய்தார். வாதத்திற்கு விசுவரூபரின் துணைவி உபயபாரதி நடுவராக இருந்தார். இவர் சரஸ்வதி தேவியின் அவதாரம். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விசுவரூபர் தோற்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நிபந்தனை. வாதம் ஆரம்பிக்கும் முன் சங்கரருக்கும் விசுவரூபருக்கும் மாலைகளை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது.
17 நாள் போட்டியின் முடிவில் விசுவரூபரின் மாலை வாடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட விசுவரூபர் துறவறத்திற்கு தயாரானார். உடனே அவரது மனைவி,"" சங்கரரே! மாலை வாடியதால் மட்டும் தாங்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது. என்னிடம் இல்லறம் பற்றி வாதம் செய்து வெற்றி பெற்றால் தான் அது முழு வெற்றியாகும்,''என்றார். சங்கரரோ பிரமச்சாரி. ஒரு மாதத்திற்கு பின் இல்லறம் பற்றிய வாதம் வைத்துக் கொள்ளலாம் என்றார் சங்கரர்.
இல்லறம் பற்றி யோசித்து கொண்டு செல்கையில், அமருகன் என்ற மன்னன் இறந்ததை அறிந்த சங்கரர், தன் யோக சக்தியால் மன்னனின் உடலில் புகுந்து இல்லறம் பற்றி அறிந்தார். சங்கரரின் உடலை அவரது சீடர் பத்மபாதர் பாதுகாத்து வந்தார். மீண்டும் சங்கரர் தன் உடலில் புகுந்து உபயபாரதியிடம் வாதம் செய்தார். உபயபாரதி தோற்றார்.  தன் கணவர் விசுவரூபர் துறவறம் ஏற்க அனுமதித்தார். சங்கரர் இவருக்கு "சுரேசுவரர்' என்ற நாமம் கொடுத்து தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.
சரஸ்வதி அம்சமான உபயபாரதியிடம் சங்கரர்,""தான் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வர வேண்டும்,''என்ற வரத்தை பெற்றார். அதற்கு சம்மதித்த உபயபாரதி,""சங்கரரே! உம்மை தொடர்ந்து வருகிறேன். ஆனால் நீர் திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும். திரும்பிபார்த்தால் நான் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன். அதன் பின் தொடர்ந்து வரமாட்டேன்,''என்ற நிபந்தனையுடன் புறப்பட்டார்.
சங்கரருக்கு விசுவரூபருடன் நான்கு சீடர்கள் அமைந்தனர். இவர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். பின்னால் உபயதேவி "கலீர்',"கலீர்' என கால் சலங்கை ஒலிக்க வந்து கொண்டிருந்தாள். அனைவரும் சிர்ங்ககிரி வந்து சேர்ந்தார்கள். இந்த இடத்தில் நல்லபாம்பும் தவளையும் சேர்ந்திருந்தது. பசுவும் புலியும் இணைந்திருந்ததை கண்ட சங்கரர், யோகிகள் தங்குவதற்கு தகுந்த இடம் என தீர்மானித்தார்.
இந்த இடம் வரை கேட்டு வந்த தேவியின் சிலம்பொலி நின்று விட திரும்பிபார்த்தார் சங்கரர்.
நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் உபயபாரதி. அங்கேயே பாறை மீது ஸ்ரீசக்ரம் வடித்து தேவியை "சாரதா' என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். இவருக்கு காட்சி கொடுத்த அன்னை,""சங்கரா! இன்று முதல் இந்த பீடம் சிர்ங்கேரி சாரதா பீடம் எனப்படும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடி கொண்டு ஆசி வழங்குவேன்,''என அருள்பாலித்தாள். சுரேசுவரரே சங்கர பீடத்தின் முதல் ஆச்சார்யர் ஆனார்.

No comments:

Post a Comment