மூகாம்பிகை
மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள்
ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி பீடமாகும்.
அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம்' பாடி அருள் பெற்றார். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.
சகலநோய் நிவாரணி: ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் "சவுந்தர்ய லஹரி' எழுதியுள்ளார்.
குடஜாத்ரிமலை: கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையானது என்பர். இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வஞபீடம், சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிஷியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர்.முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்கு துன்பம் ஏற்படும் என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக் கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி, "மூகாம்பிகை' என்ற பெயரில் தங்கினாள்இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.
No comments:
Post a Comment